தகுதிகள் :
மாநிலக் கல்வி வாரியம், மத்தியக் கல்வி வாரியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி முறையில், 10, 12-ஆம் வகுப்புகளில், தமிழ்மொழிப் பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேல்நிலைப் படிப்பில் இதற்கு இணையான கல்வி வாரியத்தில் தமிழை மொழிப் பாடமாகக் கற்ற அயல்நாட்டவரும் இளங்கலைத் தமிழ் – படைப்பாக்கம் பயில விண்ணப்பிக்கலாம்.
மக்களுக்கு மிகச் சிறந்த கல்விச் சேவையை நீண்டகாலமாக வழங்கி வரும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் அங்கமாக குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி திகழ்கிறது.
கோவையின் முதல் பன்முகக் கல்லூரியாக, சீரிய முறையில் செயல்பட்டு வரும் இக்கல்லூரி பன்முகத் தன்மைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முனைவர், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகளை முன்னெடுத்தல், கற்றல், கற்பித்தலில் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தல் ஆகியவையே தமிழ்த் துறையின் முக்கிய நோக்கமாகும்.
தொன்மையான வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட செம்மொழியாம் தமிழில் வாய்மொழி உரைநடை, இலக்கியம் மற்றும் சங்கம் முதல் சமகாலம் வரையிலான இலக்கிய-இலக்கண நூல்களில் ஏராளமான ஆய்வுக் கூறுகள் நிறைந்துள்ளன. மனித சமூகம் எதிர்கொள்ளும், உள்ளம் மற்றும் உடல் சார்ந்த இடர்களுக்கானத் தீர்வுகளும் ஆய்வுப் பரப்பில் விரவிக் கிடக்கின்றன. தொன்மைமிக்க தமிழ்க்குடிக்கு வழக்காற்றியல் ஆதாரமாக, அடையாளமாகத் திகழும் இலக்கியம் மற்றும் வாய்மொழி வழக்காறுகள் பற்றிய ஆய்வுகள், வரலாற்றுக்கான ஆவணப்படுத்தலாகவும் திகழ்கின்றன. நெடிய இம்மரபினைக் காக்கவும், தலைமுறைகள்தோறும் கடத்தவும் தமிழியல் ஆய்வுகள் இன்றியமையாதவை.
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயர் ஆய்வுக்கான அங்கமாக, அருட்செல்வர் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் திகழ்கிறது. தமிழியல் சார்ந்த, சர்வதேச அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைத்தல் ஆகியவை இம்மையத்தின் சீரிய நோக்கங்களாகும். இதனடிப்படையில், நிலவியல், தொல்லியல், மானுடவியல், மொழியியல், கலையியல், நவீனவியல் போன்ற பல பகுப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
உயர் ஆய்வுகளுக்கு உறுதுணையாக, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.
இளங்கலைக் கல்வியில் (B.A) புதுமை காணும் நோக்கில் தமிழ் இலக்கியத்தைக் கற்கவும், மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்) என்ற பாடப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.