நனிமிகு கல்விச் சேவையினை இவ்வையத்திற்கு நீண்ட நெடுங்காலமாக உரித்தாக்கி வருகின்ற குமரகுரு கல்வி நிறுவனங்களின் அங்கமாகத் திகழ்கிறது குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி. கோவையில் முதல் பன்முகக் கல்லூரியாக விளங்கி சீரிய முறையில் இயங்கிவருகின்ற இக்கல்லூரியின் பன்முகத் தன்மையுள் ஆய்வுக் களத்திற்கான முன்னெடுப்பாகவும், கற்றல் கற்பித்தலின் நிறைவு மற்றும் பயன் நிலையான ஆய்வெனும் உயர்நிலையை அடைவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதே தமிழ்த்துறைக்கான முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட பகுதிநேர ஆய்வுப் பாடத்திற்கான அனுமதியினைக் கோருவதற்கான முதல் நோக்கமாகும்.
தொன்மையான வரலாறு மற்றும் பண்பாட்டுப் பின்புலம் கொண்ட செம்மொழியாகிய தமிழில் உள்ள வாய்மொழி, இலக்கியம் மற்றும் சங்கம் முதலாக சமகாலம் வரையிலான இலக்கிய இலக்கண நூற்களுள் எண்ணிலடங்காத ஆய்வுக் கூறுகள் விரவி நிற்கின்றன. மானுட சமூகம் இவ்வுலகில் நிலைகொண்டிருக்கும் காலம் வரை, எதிர்க்கொள்ளக்கூடிய உள்ளம் மற்றும் உடல் சார்ந்து பல இடர்களுக்கான தீர்வுகளும் இவ்வாய்வுப் பரப்பில் விரவிக் கிடக்கின்றன. தொன்மைமிகுந்த நம் தமிழ்க்குடிக்கு வழக்காற்றியல் ஆதாரமாக, அடையாளமாக விளங்கும் இலக்கியம் மற்றும் வாய்மொழி வழக்காறுகள் பற்றிய ஆய்வுகள் வரலாற்றிற்கான ஆவணப்படுத்தலாகவும் திகழும். நெடிய இம்மரபினை காக்கவும், தலைமுறைகள் தோறும் கடத்தவும் தமிழியல் ஆய்வுகள் இன்றியமையானவையாகும்.குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயராய்விற்கான அங்கமாக நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் திகழ்கின்றது. தமிழியல் சார்ந்த உலகளாவிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பதே இம்மையத்தின் சீரிய நோக்கமாகும். இதற்கேற்ப நிலவியல், தொல்லியல், மானுடவியல், மொழியியல், கலையியல், நவீனவியல் எனும் ஆறு பகுப்புகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கான அடுத்த நகர்வாக, சீரிய உயராய்விற்கான தொடக்கமாக எங்கள் தமிழ்த்துறையின் இந்த ஆராய்ச்சிப் பட்ட வகுப்பு திகழவிருக்கின்றது.
உயர் ஆய்வுகளுக்கு உறுதுணையாக மேற்காணும் இவ்வாறு வகைப்பாட்டிற்குள் 80,000 மேற்பட்ட நூல்கள் அடங்கிய ஆய்வு நூலகமும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தில் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இத்தகு வாய்ப்புகளும் வசதிகளும் ஒருங்கே குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றுள்ளதால் அவர்கள் உலகளாவிய நிலையிலான தமிழாய்வு எனும் உன்னத நிலையினை இதன்வழி அடையலாம்.